பதிவுக்குள்ள போறதுக்கு முன்னே பெண்-பெண் நட்பைவிட பெண்-ஆண் நட்பில ஆண்களும் பெண்களும் உண்மையா இருப்பாங்கனு அந்த பதிவுல நண்பர் ஒருத்தர் பின்னூட்டமிட்டுருந்தாரு. அந்த கருத்துல எனக்கு உடன்பாடில்ல, நல்ல நட்பில பால் வித்யாசம் எல்லாம் இருக்காது. இருந்துச்சுன்னா அங்க நட்பை மீறி வேற எதாவது இருக்கும் :)
பொதுவாவே பெண்கள் மேல வைக்கற குற்றசாட்டு அவங்க நட்புல உண்மையா இருக்கமாட்டங்க, தோழிகள் மேலயே பொறாமைபடுவாங்க, நட்பை நெடுநாள் தொடரமாட்டாங்க, நீண்ட நாள் கழிச்சு தோழி/தோழர்களை பார்க்கும்போது பழைய நெருக்கத்தோட பழகமாட்டங்கன்னு அடுக்கிட்டே போவாங்க. ஆனா இதெல்லாம் எந்தளவுக்கு உண்மைன்னும் (அ) உண்மையாயிருந்தா அவங்க எந்தளவுக்கு அதுக்கு காரணங்கறதும் '?' ...
உண்மையா இருக்கறது/இல்லாதது, பொறாமைபடறது/படாதது எல்லாம் ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட குணங்கள், அதெல்லாம் இருபாலருக்கும் பொதுவானவை. அதயாரு பெண்களுக்கு பட்டா போட்டு வைச்சாங்கன்னு தெரியல.
உதாரணமா, பெண்கள் நண்பியோட நகை, ஆடை, அழகு-னு பொறாமைப்பட்டா, ஆண்களை பொறாமைப்படுத்தற விசயம் பக்கத்து வீட்டுக்காரனோட பைக், கார், தொழில் வளர்ச்சி-னு இருக்கும். பொறாமைப்படற விசயம் மாறாலாம், ஆனா உணர்ச்சி பொதுவானது.
உண்மையா இருக்கறது, இது கொஞ்சம் சிக்கலான விசயம்தான். உண்மையா இருக்கமாட்டாங்க-னு பெண்கள் மேல குற்றச்சாட்டு வர காரணம், இங்க பெரும்பாலான பெண்களுக்கு ஆணோடயோ, பெண்ணோடயோ நட்பை எந்த அளவுக்கு வைச்சுக்கணுங்கற எல்லை அவங்க வீட்ல இருக்கற அம்மாவாலயோ, அப்பாவாலயோ-தான் தீர்மானிக்கப்படுது. இதனாலயே அவங்க இயல்புக்கு மாறான செயல்களை பல நேரம் செய்ய நிர்பந்திக்கபடறாங்க. உதாரணமா எங்க வீட்ல ஃபோன் இல்லை, வீட்ல வேலை இருக்கு நேரத்திலயே வீட்டுக்கு போகணும், அம்மாவுக்கு உடம்பு சரியில்லை டூர் வரமுடியாது இப்படின்னு பல நேரங்கள்ல பெண்கள் சொல்ல காரணம் அவங்க மேல திணிக்கபடற கட்டுபாடுதான். அவங்க சொன்னது பொய்-னு தெரியும்போது அவங்க நட்புல உண்மையா இருக்கமாட்டாங்கனு குற்றம் சாட்டபடறாங்க.
பெண்-பெண் நட்பு ஆண்-ஆண் நட்பு அளவுக்கு நெருக்கமா இல்லாம போறதுக்கும் பெரும்பாலும் third party-தான் காரணம். எல்லாரோட நட்பும் Hi, Hello-னுதான் ஆரம்பிக்கும், காலபோக்கில நெருக்கமான நட்பா மாறும். அவங்க பழகின காலத்தை திரும்பிபார்க்கும்போது சந்தோசமான தருணங்கள் பல இருந்தாலும், சட்டுனு நினைவுக்கு வரது அவங்க நமக்கு தோளோடு தோள் கொடுத்த நேரங்கள்தான். அது நண்பனுக்காக சண்டைக்கு போனது, மன்னிப்பு கேட்டது, பண உதவி-னு எப்படி வேணா இருக்கலாம். இந்த மாதிரி வாய்ப்புகள் எத்தனை பெண்களுக்கு தரப்படுது.
நெடுநாள் கழிச்சு சந்திக்கும்போது அதே நெருக்கத்தோட பழகமாட்டங்க-ன்றது மேல பார்த்த பிரச்சனைகளோட நீட்சி-தான். பழகற காலத்திலயே அவங்க விருப்பபடி அவங்க நட்பை அமைச்சுக்க விடறதில்லை, அப்பறம் எங்க நட்பை புதிப்பிக்கறது. பெத்தவங்க வீட்ல கிடைக்காத சுதந்திரமா புகுந்த வீட்ல கிடைச்சிடப்போகுது(விதி விலக்கு உதாரணமாகாது).
பெண்களுக்கு புனிதபிம்பம் எழுப்பறது என்னோட நோக்கமில்லை. உணர்சிகள் எல்லாருக்கும் பொதுவானவை, கறுப்பாடு எல்லா இடத்திலயும் இருக்கும். எல்லாத்தையும் பொதுமைப்படுத்தறது ஆரோக்கியமான சிந்தனையா இருக்காது.
